(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின்னர் தென் மாகாணத்தில் சுமார் 10 நாட்களுக்கு 2 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.
எனினும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இருக்காது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 31 சதவீதமாக குறைந்துள்ளது. சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 16 சதவீதம் இலிருந்து 7 சதவீதமாக குறைந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் போதிய மழை பெய்யாவிட்டால் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் மட்டுமே மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். அப்போது அவசர மின் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இல்லையெனில் மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.