(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 56 நகரங்களில் உள்ள 100 மதிப்பீட்டு நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், 27,500 ஆசிரியர்கள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடவுள்ளதுடன் பாடசாலை விடுமுறை நாட்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் நடைபெறும்.
எனவே, மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக எந்த பாடசாலையும் மேலதிகமாக மூடப்படாது.
இந்த பரீட்சைக்காக 472,554 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்ததுடன் சுமார் 90 சதவீத பரீட்சார்த்திகளின் 2.6 மில்லியன் விடைத்தாள்கள் இந்த கட்டத்தில் மதிப்பீடு செய்யப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.