அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய தென்னாபிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
டெம்பா பவுமா தலைமையில் அனுபவமிக்க வீரர்களோடு அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்காவின் உலகக் கிண்ண குழாத்தில் அவுஸ்திரேலிய தொடரின் போது வாய்ப்பளிக்கப்பட்ட டேவால்ட் பிரேவிஸ், ட்ரிஸ்டான் ஸ்டாப்ஸ் ஆகிய இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம், வேகப் பந்துவீச்சாளர் வேய்ன் பர்னலுக்கும் தென்னாபிரிக்க அணி தமது உலகக் கிண்ண குழாத்தில் ஓய்வு வழங்கியிருக்கின்றது. வேய்ன் பர்னல் தோற்பட்டை உபாதைக்கு ஆளாகியிருக்கின்றமை இதற்கு காரணமாகும்.
தென்னாபிரிக்க உலகக் கிண்ண குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் நட்சத்திர விக்கெட் துடுப்பாட்டவீரரான குயின்டன் டி கொக் தான் உலகக் கிண்ணத்தினை அடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
தென்னாபிரிக்காவின் உலகக் கிண்ண குழாத்தில் அணித்தலைவர் டெம்பா பவுமா அடங்கலாக குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், எய்டான் மர்க்ரம், டேவிட் மில்லர் மற்றும் ரஸ்ஸி வன் டர் டஸேன் ஆகியோர் துடுப்பாட்டத்தினை பலப்படுத்தும் வீரர்களாக காணப்படுகின்றனர்.
இதேவேளை, ககிஸோ றபாடா அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருக்க என்ட்ரிச் நோர்கியா, லுன்கி ன்கிடி ஆகியோர் மேலதிக பலம் தரும் வீரர்களாக இருக்கின்றனர். மறுமுனையில் தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் தென்னாபிரிக்க அணியின் பிரதான சுழல்வீரராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க அணி உலகக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியினை இலங்கை அணியுடன் ஆரம்பிக்கவிருப்பதோடு குறித்த போட்டி ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி டெல்லி நகரில் நடைபெறுகின்றது.