வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காண கணக்கெடுப்பை நடத்துமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு பணிப்புரை விடுத்துள்ளது.
நிதி அமைச்சு, நலன்புரி நன்மைகள் சபை, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை ஆகியவை இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று அக்குழு அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, ‘அஸ்வெசும’ கொடுப்பனவு கிடைக்கக்பெறும் மற்றும் கிடைக்கப்பெறதாக குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உரிய அதிகாரிகளுக்கு நினைவூட்டியிருந்தார்.
அந்தவகையில், எதிர்வரும் ஐந்து வருடங்களில் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை உடனடியாக தயாரிக்குமாறு சமுர்த்தி திணைக்களத்திற்கு துறைசார் கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிராமப்புற தொழில்முனைவோரை சர்வதேச சந்தையுடன் இணைக்கும் வகையில் ‘சமுர்த்தி பிளஸ்’ என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.