முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் வகையில், முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ACAD நிறுவனத்தின் தொழிநுட்ப ஆதரவுடனும், லைக்கா குழுமத்தின் தலைவரும் ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் பல மில்லியன் ரூபாய் நன்கொடையுடனும் இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதில், ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான பொறுப்பாளர் சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், இடர் முகாமைத்துவ பிரிவினர், லைக்கா ஞானம் அறக்கட்டளை உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதிக கனமழைக் காரணமாக முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதோடு, குளத்தில் உள்ள மேலதிக நீரை வெளியேற்ற முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புக்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் இரண்டு மாதங்களாக குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றமையால், குறித்த பகுதியில் வசித்த மக்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமிலேயே தங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு சென்றுள்ளனர்.
இவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாகவே லைக்காவின் ஞானம் அறக்கட்டளை குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
முதற் கட்டமாக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான பொறுப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட குழுவினர், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டு வடக்கு, தேராவில் கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயனளிப்பதை இத்திட்டம் நோக்காகக் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவி வழங்குவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.