சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு குழு அடுத்தவாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கடன் தொகையின் இரண்டாம் தவணை குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வரி அதிகரிப்பு தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரிக்கொள்கை போன்று பிற பொருளாதாரக் காரணிகள் குறித்தும் இதன்போதும் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவி தொடர்பில் அடுத்த வாரத்தில் இறுதித் தீர்மானத்துக்கு வரக்கூடியதாக இருக்குமென அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்புக் குறித்து சீனா சாதகமான பதிலை வழங்கியுள்ளதால் இந்த பேச்சுவார்த்தை மேலும் சாதகமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான கடன் தொகையின் இரண்டாம் தவணையில் சுமார் 334 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து நாணய நிதியத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகளை பொறுத்தே, நவம்பர் மாதத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்படும் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.