சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற வீட்டுப் பணிப்பெண் ஒருவர் மிக மோசமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுள்ளார்.
இன்று அதிகாலை 04.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த 9ஆம் மாதம் 17ஆம் திகதி அரேபியாவில் உள்ள மதீனாவில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றேன். ஏற்கனவே அங்கு பணியாற்றிய பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரது பைகள் அந்த வீட்டில் இருந்ததனை கண்டேன். அந்த வீட்டின் உரிமையாளரான பெண் எப்போதும் என்னை அடிப்பது, திட்டுவது, தீயில் சுடுவது போன்று சித்திரவதைகளை செய்தார்.
ஒரு முறை கீழே விழுந்து விட்டேன். அதனால் என்னால் வேலை செய்ய முடியவில்லை எனக் கூறினேன். என்னை சலவை இயந்திர அறைக்கு இழுத்துச் சென்று அடித்து, தரையில் வீசினார். இரண்டு ஆணிகள் மற்றும் இரும்பு உருண்டையைக் கொடுத்து குடிக்குமாறு கூறினார்கள். குடிக்கவில்லை என்றால் என் தங்க நகைகளை திருடியதாக கூறி பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவதாக மிரட்டினார்கள்.
நான் குடித்துவிட்டேன் அப்போது என் தொண்டையில் ஒரு ஆணி சிக்கிக் கொண்டது என்னால் சுவாசிக்க முடியவில்லை. இது குறித்து இலங்கையில் உள்ள முகவர் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினேன். அங்கிருந்த பெண் என்னை திட்டிவிட்டு, அந்த வீட்டிலேயே வேலை செய்யுமாறு கூறினார்’ என நாடு திரும்பிய பெண் குறிப்பிட்டுள்ளார்.