NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் ஜுலை மாதத்தில் அதிகரிப்பு!

ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலையில் சரக்கு ஏற்றுமதி மூலம் இலங்கையின் வருமானம் 2.18% அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் சரக்கு ஏற்றுமதி வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. ஜுலையில் மொத்தமாக 1,027.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானமாகவுள்ளது.என்றாலும், 2022ஆம் ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் இது 11.79% சரிவாகும்.

ஆடை, ரப்பர் மற்றும் ரப்பர் சார்ந்த பொருட்கள் மற்றும் தேங்காய், தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டிருந்தமையே இதற்கு காரணமாகும்.இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், 2022ஆம் ஆண்டின் குறிப்பிட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, ஒட்டுமொத்த சரக்கு ஏற்றுமதி 10.26% சரிந்து 6,898.34 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இலங்கையின் முதல் 10 ஏற்றுமதிச் சந்தைகளில், ஐக்கிய அரபு இராஜ்ஜிய சந்தையில் மட்டுமே வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது.  அத்துடன்,  இந்தியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சந்தைகளிலும் கடந்த ஆண்டு ஜூலை வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்,  இவ்வாண்டு ஜுலையில் வலுவான செயல்திறனை இலங்கையின் ஏற்றுமதிகள் வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகவுள்ள அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு ஜூலை உடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு ஜூலை வரையான காலப்பகுதியில் 15.60 வீதம் அதாவது 253 மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை வரையான காலப்பகுதியில் 1620.57 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles