எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பேக்கரிகளில் சுமார் 75 சதவீதமானவை மின்சாரம், விறகு, டீசல் போன்றவற்றைத் தமது உற்பத்திகளுக்காகப் பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியதோடு, மொத்த பேக்கரிகளில் 2000க்கும் குறைவானவர்களே எரிவாயுவைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து மாவு, முட்டை, நல்லெண்ணெய் போன்றவற்றின் விலைகள் குறைந்தால் மட்டுமே பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.