NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குதொடுவாய் – அகழ்வுகள் முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிப்பு

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை   விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்றையதினம் (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் (20) அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles