(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தென் கொரியாவில் பிறக்கும் குழந்தைகளின் வயதை கணக்கெடுப்பதில் நீண்ட காலமாக இரண்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன.
தற்போது இவை இரண்டையும் தென்கொரிய அரசு நீக்கியுள்ளது. ஏனைய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
இதனால், தென் கொரியர்களின் வயதில் ஒன்று குறையப்போகிறது.
கொரியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வயது கணக்கீட்டு முறைகளில் ஒன்று பல நூற்றாண்டுகள் பழமையான ‘கொரிய வயது’ முறையாகும். இதன்படி, ஒரு நபர் பிறந்தவுடனேயே ஒரு வயதுடையவராக கணக்கெடுக்கப்பட்டு ஜனவரி முதலாம் திகதி ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கிறார். இந்த முறையில், டிசம்பர் 31ஆம் திகதி பிறந்த ஒரு குழந்தைக்கு மறுநாள் 2 வயது ஆகும்.
நாட்டில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு தனி ‘எண்ணும் வயது’ முறையில், ஒரு நபரை பிறக்கும் போது பூஜ்ஜிய வயதாக கருதி, பிறகு ஜனவரி முதலாம் திகதி அன்று ஒரு வருடத்தைக் கூட்டுகிறது.
பொதுவாக, 2003ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28ஆம் திகதி பிறந்தவர் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி நிலவரப்படி சர்வதேச அமைப்பின் கீழ் 19 வயதுடையவராக கருதப்படுவார்.
ஆனால், எண்ணும் வயது முறையின் கீழ் 20 வயதுடையவராகவும் மற்றும் கொரிய வயது முறையின் கீழ் 21 வயதுடையவராகவும் கருதப்படுவார்.
கடந்த டிசம்பரில், இரண்டு பாரம்பரிய எண்ணும் முறைகளையும் இரத்து செய்ய ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







