பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைத் தேசிய மக்கள் சக்தி இதுவரையில் முன்வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
75 ஆண்டுகளாக நிலவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஜே.வி.பியினருக்கு இந்த சட்டத்தின் பாதிப்பு நன்றாகவே தெரியும் எனவும் கூறியுள்ளார்.
இந்த சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிட்டு வந்ததாகவும், எனினும், தேர்தலுக்குப் பின்னர், ஒரு வாரம் கழியும் முன்பே தற்போதைய அரசாங்கம் தமது நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படும் போது, வடக்கிலும் தெற்கிலும் பயங்கரவாத தடைச் சட்டம்; முரண்பாடான வகையில் கையாளப்படுவதாகவும், அதனை உடனடியாக ஒழிக்க வேண்டும் எனவும் அவர்; தெரிவித்தார்.
இதனையடுத்து, இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார பயங்கரவாதத் தடை சட்டம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.