NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த புழு !

அவுஸ்திரேலியாவில் ஒரு ஏரிக்கரை அருகில் வசித்து வந்த 64 வயது பெண்மணிக்கு நீண்ட நாட்களாக உடல் ஆரோக்கியத்தில் பல குறைபாடுகள் இருந்து வந்தன.

நிமோனியா எனப்படும் மார்புச்சளி, வயிற்று வலி, வயிற்று போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு ஆகியவற்றுக்கு அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் மாத்திரை, மருந்துகளால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

2021 ஜனவரி மாத கடைசியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீண்ட மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டது. ஆனால் நிலைமை சீராகவில்லை.

2022-ல் அவர் உடல்நிலையில் உள்ள குறைபாடுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவரின் மூளையை ஸ்கேன் செய்து பார்க்க விரும்பி அதற்கு பரிந்துரைத்துள்ளனர்.

ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அந்த பெண்மணியின் மூளையில் ஏதோ ஒரு புதிய பொருள் தென்பட்டுள்ளது.

அதனை அகற்ற ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், அதனை நரம்பியல் நிபுணர் அடங்கிய ஒரு சிறப்பு அறுவை சிகிச்சை குழு செய்துள்ளது.

அப்போது அவர் மூளையில் காணப்பட்ட “புதிய பொருள்” ஒரு உயிருள்ள புழு என தெரிந்தது. அந்த புழு பிரகாசமான சிகப்பு நிறத்தில், சுமார் 3 இன்ச் (8 சென்டி மீட்டர்) நீளம் இருந்தது.

இதனையடுத்து மருத்துவ குழுவினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அறுவை சிகிச்சை மூலமாக அதை வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர். அதற்கு பிறகு அப்பெண் மருத்துவ பராமரிப்பு மற்றும் ஆலோசனைகளால் நலமடைந்தார்.

அறிவியல் மொழியில் ஒஃபிடாஸ்காரிஸ் ரொபர்ட்ஸி (Ophidascaris robertsi) என அழைக்கப்படும் பாம்பு வகையை சேர்ந்த இவ்வகை புழுக்கள் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் காணப்படும்.

இந்த பெண்மணியின் வாழ்க்கை முறைக்கோ, தொழிலுக்கோ பாம்புகளோடு எந்த தொடர்பும் இல்லையென்றாலும் அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள ஏரியில் பாம்புகள் அதிகம் காணப்படும் என்பதால் அனேகமாக அவர் அதிகமாக உண்டு வந்த நியூசிலாந்து கீரை வகைகளில் அந்த புழுவின் முட்டைகள் இருந்து அவர் அதனை உண்ணும்போது உள்ளே சென்று, புழுவாக உயிர் பெற்று, இரத்தத்தில் கலந்து, மூளைக்கு சென்று, அங்கேயே உண்டு அதன் மூலம் உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம் என யூகிக்கின்றனர்

“உயிருள்ள புழு ஒருவரின் மூளையில் வாழ்வது இதுதான் உலகிலேயே முதல்முறை. ஆனால் இதுபோன்ற மருத்துவ வழக்குகள் எதிர்காலத்திலும் வரக்கூடும்” என மருத்துவ குழுவிற்கு ஆலோசகராக செயல்பட்ட அவுஸ்திரேலியாவின் தலைநகர் கென்பர்ரா பகுதியில் உள்ள தொற்று நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் சஞ்சய சேனநாயக தெரிவித்துள்ளார்.

மருத்துவ துறையில் எத்தனையோ நவீன சிகிச்சை முறைகள் வந்திருந்தாலும், சில அரிய மற்றும் உலகிலேயே புதுவகை நோய்களும், உடல் குறைபாடுகளும் தோன்றி கொண்டே இருக்கும் என இதுகுறித்து முதலில் தகவல் வெளியிட்ட அமெரிக்காவிலுள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centre for Disease Control and Prevention) தெரிவிக்கிறது.

Share:

Related Articles