தம்புள்ளையில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெற்று முடிந்த முதலாவது இளையோர் ஒருநாள் போட்டியில், இலங்கை இளம் அணியானது 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
இன்னும் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரிலும் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகளின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இங்கே இளையோர் ஒருநாள் தொடர் மற்றும் இளையோர் டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது. இந்த நிலையில் முதலாவதாக இளையோர் ஒருநாள் தொடர் நடைபெறுவதோடு,, தொடரின் முதல் போட்டி நேற்று (27) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் இளம் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து சிறந்த ஆரம்பத்தினை பெற்ற போதும் ஒரு கட்டத்தில் இலங்கை பந்துவீச்சாளர்களின் அபாரம் காரணமாக 96 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியதோடு 49.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் இளம் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மத்திய வரிசையில் ஆடிய நேதன் சேலி 82 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை பந்துவீச்சில் காருகே சங்கேத் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், தினுர கலுப்பகனே 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 224 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 43.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 224 ஓட்டங்களுடன் அடைந்தது.
இலங்கை 19 வயதின் கீழ் அணி துடுப்பாட்டத்தில் அதன் வெற்றிக்கு காரணமாக அமைந்த வீரர்களில் ரவிஷன் நெத்சார (65), சுபுன் வடுகே (56) மற்றும் தினுர கலுப்பகன (52) ஆகியோர் அரைச்சதம் விளாசி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
மேற்கிந்திய தீவுகள் இளம் அணியின் பந்துவீச்சு சார்பில் நேதன் எட்வார்ட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அவரின் பந்துவீச்சு வீணாகியது.
இப்போட்டியின் வெற்றியோடு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இளையோர் ஒருநாள் தொடரில் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக இளையோர் ஒருநாள் தொடரின் அடுத்த போட்டியில் எதிர்வரும் புதன்கிழமை (30) ஆடுகின்றது.