NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேலைக்கு வராவிட்டால் லயன் அறைகளை நிர்வாகத்திடம் ஒப்படையுங்கள் – இறம்பொடை நிர்வாகம் அடாவடி…!

நுவரெலியா – இறம்பொடை ஆர்.பீ. டிவிசனில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தால் எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடிதம் கிடைக்கப்பெற்று 7 நாட்களுக்குள் வேலைக்கு வராவிட்டால், நீங்களாகவே சுய விருப்பத்தின்பேரில் வேலையைவிட்டு விலகிவிட்டீர்கள் எனக் கருதப்படுவீர்கள் எனவும், தொழில் பதிவேட்டில் இருந்து பெயர் நீக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வேலையைவிட்டு விலகியவர்கள் 15 நாட்களுக்குள் லயன் வீடுகளை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட உதவி தொழில் ஆணையாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

அதற்கமைய, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதுடன் அதற்கான அவசியத்துவத்தையே இந்த சம்பவமும் எடுத்து காட்டுகின்றது என என காணி உரிமை இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், இறம்பொடை தோட்டத்தில் ஆர்.பீ. டிவிசன் தோட்ட தொழிலாளர்களுக்கு, நிர்வாக தரப்பால் இழைக்கப்பட்டுள்ள அநீதியை பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

அதேநேரம், இவ்விவகாரம் தொடர்பில் தற்போது தரவுகள் திரட்டப்பட்டுவருகின்றன எனவும், அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைப்பின் இணைப்பாளர் எஸ்.டி. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles