NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டிக்கு முன்னேறியது பி-லவ் கண்டி அணி!





லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் முதலாவது வெளியேற்றுப் போட்டியில், பி-லவ் கண்டி அணி வெற்றிபெற்று இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில், பி-லவ் கண்டி அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியில் காலி டைடன்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் பி-லவ் கண்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பி-லவ் கண்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ஹரிஸ் 79 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில், நுவான் துசார 4 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, 17.2 ஓவர்கள் நிறைவில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பி-லவ் கண்டி அணி வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சொயிப் மாலிக் 31 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பி-லவ் கண்டி அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 6 விக்கெட்டுகளையும் முஜிப் உர் ரஹ்மான், நுவான் பிரதீப் மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சு சார்பில் 6 விக்கெட்டுகளை சாய்த்த வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

Share:

Related Articles