இலங்கையிலிருந்து கொண்டுசென்ற கலாசார மற்றும் பாரம்பரிய நினைவு பொருட்களை இவ்வருட இறுதிக்குள் மீண்டும் இலங்கையிடம் கையளிக்க தொல்பொருட்களின் உரிமையை மாற்றுவது தொடர்பான இரண்டு சட்ட ஆவணங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இலங்கையிலிருந்து கொண்டுசென்ற கலாசார மற்றும் பாரம்பரிய நினைவு பொருட்களை மீண்டும் இலங்கைக்கு வழங்க நெதர்லாந்தின் கலாசார மற்றும் ஊடகத்துறைக்கான மாநிலச் செயலாளர் குணாய் உஸ்லு தலைமையிலான தூதுக்குழு கடந்த 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.இந்நிலையில், நேற்றைய தினம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார, அலுவல்கள் அமைச்சில் இது தொடர்பான சட்ட ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டது.
நெதர்லாந்தின் கலாசார மற்றும் ஊடகத்துறைக்கான மாநிலச் செயலாளர் குணாய் உஸ்லு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார, அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இணைந்து இதற்கான ‘ஒப்புகைப் பரிமாற்றம்’ மற்றும் ‘கடன் ஒப்பந்தம்’ ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
புகழ்பெற்ற Lewke’s canon, இரண்டு தங்க வாள்கள் (சம்பிரதாய வாள்கள்), ஒரு சிங்கள கலாசாரக் கத்தி, ஒரு வெள்ளி வாள் மற்றும் இரண்டு துப்பாக்கிகள் ஆகிய பொருட்களையே நெதர்லாந்து மீண்டும் இலங்கைக்கு கையளிக்கவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விக்கிரமநாயக்க,“குறித்த தொல்பொருட்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படும். இந்த கலைப்பொருட்களை இலங்கையில் பாதுகாப்பதற்கான விசேட நடைமுறை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலாசார பாரம்பரியம் பற்றிய அறிவைப் பரப்புவதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இதுபோன்ற நினைவுச்சின்னங்களின் விபரங்களை பாடத்திட்டத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.