(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
களு கங்கையில் மனிதக் கழிவுகளை கொட்டிய இருவரை ஹொரணை – அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
‘அத்தியாவசிய சேவைகள்’ என்ற பெயர்ப்பலகையுடன் பௌசர் வண்டி சாரதியொருவரும், அதன் உதவியாளருமே இவ்வாறு மனிதக் கழிவுகளை ஆற்றில் கொட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்குருவத்தோட்ட, மாபுகொட, உடுகம்மன பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் பவுசரை நிறுத்தி இருவர் களுகங்கையில் மனிதக் கழிவுகளைக் கொட்டுவதற்குத் தயாராகி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இவர்கள் களுத்துறை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதாகவும், அப்பகுதியிலுள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்காகக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த நிறுவனம் அரசாங்கத்தில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.