(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று (13) கொண்டாடப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை (03) கொடியேற்றத்திற்கு முன்னதாக காலை 6 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கொடியேற்றத்தை அடுத்து தினந்தோறும் மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
நேற்று (12) இரவு 7 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
இதேவேளை, பெருவிழா திருப்பலிகள் இன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா தலைமையில் சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் அன்ரனி ஜயக்கொடி ஆண்டகை தலைமையில் ஆங்கில மொழியிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் பெருவிழா நிறைவுபெறும்.