சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுவப்படவுள்ள பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்துக்கான முதலீடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்துக்காக சீனா, 4.5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக முன்னைய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த செய்தியை முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை கோடிட்டு, சர்வதேச ரொய்ட்டர் செய்தி சேவையும் செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், அண்மையில் ஜனாதிபதின் சீன விஜயத்தின்போது இந்த திட்டம் தொடர்பிலான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
4.5 பில்லியன் டொலர் முதலீடு என்பதற்கு பதிலாக 3.7 பில்லியன் டொலர்களே குறித்த திட்டம் தொடர்பான உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, எவ்வாறு 800 மில்லியன் டொலர்கள் குறைப்பு ஏற்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொழும்பில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம் பற்றிப் பேசும் எந்த ஆவணத்தையும் தாம் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து குறிப்புகளும் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் சீன முதலீட்டைப் பற்றியதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இந்தத் திட்டம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் சினோபெக் முதலீட்டை உள்ளடக்கியது என்று பலமுறை கூறியதையும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.