சுகாதார அமைச்சர் மற்றும் அந்த அமைச்சின் அதிகாரிகள் ஒரு வருட காலப்பகுதியில் 50 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சர்வதேச சுகாதார பிரிவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். ஶ்ரீதரனால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஐந்து வெளிநாட்டுப் பயணங்களையும், சுகாதாரச் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இரு வெளிநாட்டுப் பயணங்களையும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவும் நான்கு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட முகவர் நிலையங்கள் விடுத்த அழைப்பின் பிரகாரம் அவர்கள் இந்த வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், விமான டிக்கெட்டுகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்கான செலவுகளை அந்த நிறுவனங்களே செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சின் சர்வதேச சுகாதாரப் பிரிவு இந்த வைத்தியர்களுக்கு வெளிநாட்டு கடமை விடுப்புக்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு சாதாரண கொடுப்பனவையும் வழங்க அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.