ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
நடப்பாண்டில் மட்டும் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி வளர்ச்சியை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. இதற்கு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி என்று பிரிந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஐபிஎல் அணிகளின் மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதில் 5 முறை கிண்ணம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு ரூ.1,930 கோடியாக கணக்கிடப்பட்டு முதலிடத்தில் உள்ளது.
2வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. அதன் மதிப்பு ரூ.1,896 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 3வது இடத்தில் ரூ.1,805 கோடி மதிப்புடன் கொல்கத்தா உள்ளது. 4வது இடத்தில் உள்ள 5 முறை சாம்பியனான மும்பை அணியின் மதிப்பு ரூ.1,704 கோடியாக உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் மதிப்பு ரூ.1,111 கோடியாகவும், ஐதராபாத் அணியின் மதிப்பு ரூ.1,103 கோடியாகவும் உள்ளது.