நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இம்முறை வரவு செலவு திட்டத்தில் இலங்கை விமானப்படைக்கான ஒதுக்கீடுகளின் அளவு மற்றும் விமானப்படையில் தற்போது காணப்படும் தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் (ஐளழஅயவய யுமழை) இடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
ஜப்பான் அரசு அண்மையில் ஆரம்பித்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உதவித் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இசொமதா அகியோ (ஐளழஅயவய யுமழை) தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்தில் தேசிய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இணைந்து மேற்கொள்ளும் திட்டம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டதோடு அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் விமான நிலைய முதலீடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, விரைவில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோ (ஐளழஅயவய யுமழை), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.