அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றைப் பிரிவில் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.
இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் பெர்னாபே சாபாடாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் ஜோகோவிச் தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
3வது சுற்றில் சக நாட்டு வீரரான லாஸ்லோவை ஜோகோவிச் எதிர்கொள்ள உள்ளார். உலகின் ஏழாவது நிலை வீரர் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்ஸிப்பாசை தரவரிசையில் 128 வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரர் டோமினி ஸ்டிரிக்கர் வீழ்த்தினார்.
சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் 7 – 5, 6 – 7, 7 – 6, 6 – 3 என்ற செட் கணக்கில் டோமினிக் ஸ்டிரிக்கர் வெற்றி பெற்றார். 2020 ஆம் ஆண்டு யு எஸ் ஓபன் சம்பியன் பட்டத்தை வென்ற டோமினிக் தீம்மை அமெரிக்க வீரர் ஷெல்டன் எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஷெல்டன் 7 – 6 என்ற கணக்கில் வென்ற நிலையில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம்க்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இரண்டு ஆண்டுகளில் காயத்தால் அவதிப்பட்டு தற்போது தான் முதல் வெற்றியை டோமினிக் தீம் முதல் சுற்றில் பெற்ற நிலையில் தற்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் போட்டியிருந்து விலகினார்.
உலகின் 5-ம் நிலை வீரரான நோர்வேவின் கேஸ்பர் ரூட் சீன வீரரிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். இரண்டாவது சுற்றில் மூன்று முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.