உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பயனர்களுடன் மிகவும் வெற்றிகரமான சமூக ஊடகமாக இயங்கி வருகிறது டுவிட்டர். இந்த நிறுவனத்தை அண்மையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் வாங்கினார்.
எலன் மஸ்கின் இந்த அதிரடிகளால் பலரும் டுவிட்டரில் இருந்தே வெளியேறும் முடிவைக் கூட எடுத்தார்கள். இதற்கிடையில் பயனர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை டுவிட்டரில் புகுத்தும் முயற்சியில் அந்த நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.
அந்த வரிசையில் வரும் அக்டோபர் மாதம் டுவிட்டர் வீடியோக்களை ஸ்மார்ட் டிவிகளில் பார்ப்பதற்கு ஏதுவான செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது டுவிட்டர் நிறுவனம். இந்த தகவலை எலன் மஸ்க் தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
டுவிட்டரில் ராபின்சன் என்ற கணக்கின் பெயர் கொண்ட பயனாளர் ஒருவர், ஸ்மார்ட் டி.வி.க்களுக்கான டுவிட்டர் வீடியோ செயலி ஒன்று உண்மையில் எங்களுக்கு தேவையாக உள்ளது. டுவிட்டரில் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வீடியோவை காண முடியவில்லை என பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரில் 2 மணி நேரம் ஓட கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியையும் ட்விட்டர் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வெரிஃபைட் கணக்குகளை கொண்டுள்ள பயனாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது . அப்படி டுவிட்டருக்கான வீடியோ செயலி அறிமுகம் செய்யப்பட்டால் அது யூடியூப் செயலிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. யூடியூபைப் போலவே டுவிட்டரில் கண்டண்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்ட வசதி ஏற்படுத்தப்படும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது.