(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
திரிபோஷா உற்பத்தி மற்றும் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
உற்பத்தி மூலப் பொருள் பற்றாக்குறை காரணமாக சிறிது காலம் தடைப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் தற்போது வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், தற்போது மாதமொன்றுக்கு 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஒரு மாதத்திற்குத் தேவையான திரிபோஷ உணவை உற்பத்தி செய்ய 15 கிலோ மெற்றிக் டொன் சோளம் தேவைப்படுவதாகவும், அதனை உள்நாட்டில் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பெரும்பாலான உள்ளுர் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டாலும், அறுவடைக்கு பின் தேவையான தொழிநுட்ப அறிவு இல்லாதமையால், சரியான தரத்துடன் சந்தைக்கு பயிரை வழங்க முடியாமல் உள்ளது.
தற்போது திரிபோஷாவுக்கு மேலதிகமாக சுபோஷ என்ற பேரில் புதிதாக இன்னுமொரு போஷாக்கு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நியூட்ரிசன் பார் எனும் பேரில் பிஸ்கட் வகையொன்றும் உற்பத்தி செய்யப்படுகின்றது.
அவற்றுக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டளவில், திரிபோஷா கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்குச் சொந்தமான இலாபம் ஈட்டும் முக்கிய வணிகமாக மாறியுள்ளது.
2021ஆம் ஆண்டில், சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் திரிபோஷா நிறுவனம் 100 சதவீதம் சுயாதீன நிறுவனமாக மாறியுள்ளது. உற்பத்தி செலவில் 8 சதவீதம் இலாபத்தொகையுடன் சுகாதார அமைச்சுக்கு திரிபோஷா பொதி வழங்கப்படவுள்ளது.
மாதாந்தம் 19 இலட்சம் திரிபோஷா பொதிகள் வழங்கப்பட வேண்டும். எனினும் 13 இலட்சம் பொதிகள் வரை தற்போதைக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
தேவையான அளவு சோளம் கிடைத்தால் 19 இலட்சம் பொதிகளையும் தொடர்ச்சியாக 20 நாட்களுக்குள் இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.