(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் குருதி மாற்றும் இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் ஏற்பட்டுள்ள நிர்வாகப் பிரச்சினையே இந்த நெருக்கடிக்குக் காரணம் எனவும், இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டதாகவும், ஆனால், அந்த ஒப்பந்தங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால், பல மாதங்களாக உரிய பணிகள் நடைபெறாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு வரவு, செலவுத் திட்டத்திலும் சுகாதார அமைச்சுக்கு 200 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் போது இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவது வேதனைக்குரிய விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.