சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மூலம் விடுக்கப்பட்ட தனிப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் இலங்கைக்கு நன்கொடையாக பெறப்படவுள்ளன.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மூலம் பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் ஊடாக அந்நாட்டு பிரதமரிடம் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் தலையீட்டின் மூலம், எதிர்வரும் வாரத்திற்குள் 58,307 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துக் கையிருப்பு நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வாக, நாட்டின் பிரதமரின் இந்தக் கோரிக்கைக்கு சுகாதார அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு சாதகமான பதிலைப் பெற்று, இந்த நாட்டிலுள்ள மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அந்த மருந்துகளில் புற்றுநோய், சிறுநீரகம் உட்பட இந்நாட்டுக்கு அத்தியாவசியமான பல மருந்துகள் இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தனது கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளித்து இந்த மருந்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்த பங்களாதேஷ் பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போதுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு இது ஒரு தீர்வாகும்.
நீண்டகால வேலைத்திட்டமாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அரசாங்கங்களுக்கு இடையில் மருந்துகள் தொடர்பான அரச மட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதன்மூலம், நாட்டிற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்ய முடிகிறது.
மேலும், எதிர்காலத்தில் நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவித்தார்.