சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இன்று (03) நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் நதீஷா தில்ஹானி லேக்கம்கே வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டு விழாவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சியில் பதக்கம் வென்று இலங்கை அசத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டு விழாவின் 11ஆவது நாளான இன்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட நதீஷா தில்ஹானி லேக்கம்கே, 61.57 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து இலங்கை சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.முன்னதாக, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 60.64 மீட்டர் தூரத்தை எறிந்து அவர் இலங்கை சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனிடையே, ஈட்டி எறிதலில் தனது அதிசிறந்த தூரத்தைப் பதிவு செய்த நதீஷா, 72 ஆண்டுகால ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் மைதான நிகழ்ச்சியில் பதக்கம் வென்ற முதல் இலங்கையராகவும் இடம்பிடித்தார்.
இதேநேரம், 2006ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் சுசன்திகா ஜயசிங்க 100 மீட்டர் (வெள்ளி), 200 மீட்டர் (வெண்கலம்) ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் பதக்கங்கள் வென்ற பின்னர் மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்று கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு கிடைத்த 2ஆவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும். முன்னதாக நடைபெற்ற மகளிர் T20 போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமின்றி, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ள இலங்கை 11ஆவது நாள் நிறைவடையும் பதக்கப் பட்டியலில் 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, நதீஷா வெள்ளிப் பதக்கம் வென்ற போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி (62.92 மீட்டர்) தங்கப் பதக்கத்தையும் சீனாவின் ஹுய்ஹுய் லியூ (61.29 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.