(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பிரான்ஸ் நாட்டில் இன்று தேசிய தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இந்தியாவின் சார்பில் திருவள்ளுவர் சிலையை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப்பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப்பெரிய பெருமை எனக்கு உண்டு.
பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்சில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.
100 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கான யுத்தத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். பிரெஞ்சு மண்ணில் நிகழ்ந்த யுத்தத்தில் பங்கேற்று பிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் பிரான்சின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி அறிவித்துள்ள திருவள்ளுவர் சிலையை இந்தியா – புதுவையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் முனுசாமி என்பவர் வடிவமைத்து உள்ளார். இந்த சிலை வெண்கலத்தில் 7 அடி உயரத்தில் 600 கிலோ எடை யில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம், பிரான்ஸ் அரசு அனுமதியுடன் பாரிஸ் அருகே செர்ஜி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.