NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய தலைவராக சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்பக் குழுவின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தொழில்நுட்பக் குழுவை பெயரிடும் விசேட வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஞாயிற்றுக்கிழமை (02) வெளியிட்டுள்ளார்.

தேசிய விளையாட்டுச் சட்டத்தின் 25ஆவது விளையாட்டுச் சரத்தின் பிரகாரம், இந்த புதிய தொழில்நுட்பக் குழு விளையாட்டுத்துறை அமைச்சரால் பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

சனத் ஜயசூரியவைத் தவிர முன்னாள் வீரர்களான பர்விஸ் மஹரூப், கபில விஜேதுங்க, சரித் சேனாநாயக மற்றும் அசந்த டி மெல் ஆகிய நால்வரும் புதிய தொழில்நுட்பக் குழுவிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சனத் ஜயசூரிய, அசந்த டி மெல் மற்றும் கபில விஜேதுங்க ஆகியோர் இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் தலைவராக செயற்பட்டுள்ளதுடன், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முகாமையாளராக பர்வீஸ் மஹரூப் பணியாற்றியுள்ளார்.

இதன்படி, இந்த புதிய கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு மார்ச் 27ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2325/05 இன் கீழ் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் சபையில் நடக்கும் விடயங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய விளையாட்டு பேரவை ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்குவதே இந்த குழுவின் பிரதான செயற்பாடாகும்.

முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டை வளப்படுத்தும் முகமாக முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தலைமையில் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்றை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமித்திருந்தார்.

அந்தக் குழுவில் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles