பொரளை ஆயுர்வேத வைத்தியசாலையின் அனைத்து சேவைகளையும் நவீனமயப்படுத்தி, முழுமையான தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொரளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டதன் பின்னர், நிர்வாக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துறையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நோயாளர் பராமரிப்பு சேவையில் அனைத்து சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு முறையான ஒருங்கிணைந்த சிகிச்சை சேவையை வழங்க, அனைவரின் ஒத்துழைப்புடனும் உரிய திட்டம் ஒன்றை தயாரிப்பது அவசியமாகும் எனக் கூறினார்.
அத்துடன், சரியான தீர்மானங்களை மேற்கொண்டு உயர்தரமான மற்றும் வினைத்திறனுடன் கூடிய வைத்தியசாலையாக இவ்வைத்தியசாலையை முன்னெடுத்துச் செல்லுமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலை தற்போது 216 படுக்கைகள், 11 நோயாளர் அறைகள் மற்றும் 87 கட்டணம் அறவிடப்படும் அறைகளையும் கொண்டுள்ளது.
வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
ஆண்டுதோரும் மூவாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான நோயாளர்கள் உள்நோயாளர் பிரிவில் சிகிச்சைகளை பெறுகின்றனர். மேலும் இது தற்போது நாட்டில் உள்ள ஒரே ஒரு ஆயுர்வேத தேசிய வைத்தியசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.