(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மணிப்பூரில் நடந்தேறி வரும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளின் போது, 3 பெண்களின் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தப்படுத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த காணொளியில் ஒரு பெண் கை குழந்தையுடன் இருந்ததால் அவரை மட்டும் விட்டு விட்டு, ஏனைய 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலம் நடத்தினர்.
அந்த 2 பெண்களில் 21 வயது இளம்பெண்ணும் ஒருவர் ஆவார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரரை அடித்து கொன்றனர்.
மூன்றாவது பெண்ணின் கணவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஆவார். கார்கில் போரில் முன்களத்தில் நின்று போராடிய வீரர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரச்சந்துபூர் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் அவர் மே 4ஆம் திகதி நடந்த மிலேச்சத்தனமான வன்முறை, கௌரவம் அனைத்தும் சூறையாடப்பட்டு விட்டன. வீடுகளை தீ வைத்து எரித்தனர். கால்நடைகள் அனைத்தையும் கொன்று குவித்தனர்.
அவர்களது வெறியாட்டத்தால் 9 கிராமங்களில் இருந்த மக்கள் அனைத்தையும் இழந்து அகதிகள் போல மாறிவிட்டனர். பயத்தில் அருகில் உள்ள காடுகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். அதன்பிறகும் மைதேயி இன மக்கள் விடவில்லை. துரத்தி துரத்தி வேட்டையாடினார்கள். துப்பாக்கி முனையில் மிரட்டிதான் பெண்களின் ஆடைகளை கலைந்தனர். சில பெண்களை பிடித்து சென்று வயல்வெளியில் நிற்க வைத்து நடனமாட சொன்னார்கள்.
பெண்களை அடித்து கைத்தட்டி சிரித்தனர். எதற்காக இவ்வளவு கொடூர மனதுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க முடியாமல் இருந்தது. கார்கில் போர் களத்தில் நின்றதை விட சொந்த மண்ணில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை இப்போதுதான் நான் உணர்ந்தேன்.
வன்முறை நடந்தபோது எப்படியோ என் மனைவி என்னிடம் இருந்து தனியாக பிரிய நேரிட்டது. அதனால் தான் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டது. அவள் இன்னமும் தனக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவில்லை. மிக மிக கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். பட்டப்பகலில் கும்பலாக வந்து நடத்திய வெறியாட்டம் இன்னமும் மனதுக்குள் வந்துகொண்டே இருக்கிறது.
மனிதாபிமானமே இல்லாமல் பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆறாத வடுவாக மாறிவிட்டது. தற்போது எங்களது 9 கிராமங்களிலும் யாரும் இல்லை. பல்வேறு திசைகளில் சிதறிவிட்டனர். நாங்களும் உடைமைகளை இழந்துதான் பல மணி நேரம் நடந்து முகாமுக்கு வந்து சேர்ந்துள்ளோம். எனது வீடு முழுமையாக தீ வைத்து எரிக்கப்பட்டு விட்டது. அந்த வீடு எனது மனைவி கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்த பணத்தில் இருந்து கட்டியதாகும். இப்போது நிவாரண முகாம் மட்டுமே எங்களுக்கு தஞ்சம் தந்துள்ளது. இவ்வாறு அவர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.