மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் மொய்சுவின் (Mohamed Muizzu) அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக நேற்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தில் கடும் அமளியும் மோதலும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மாலைதீவின் மக்கள்பிரதிநிதிகள் மோதிக்கொள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆளும் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ், அரசாங்கத்திற்கு சார்பான மாலைதீவு முன்னேற்றக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
ஜனாதிபதி மொஹமட் மொய்சுவின் அமைச்சரவையில் மேலும் 4 அமைச்சர்களுக்கு ஒப்புதல் வழங்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ஜனாதிபதி மொஹமட் மொய்சுவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில், அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு அனுமதி வழங்காது எதிர்க்கட்சிகள் பொதுப்பணிகளை சீர்குலைப்பதாக ஆளும் கட்சியான மக்கள் தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.