NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் வெற்றிப்பாதையில் ஜப்னா கிங்ஸ் : புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் !

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) கோல் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

தங்களுடைய முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்றிருந்த கோல் டைட்டன்ஸ் அணி நடப்பு சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணியை கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தசுன் ஷானக தலைமையிலான கோல் டைட்டன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து களமிறங்கியது.

துடுப்பெடுத்தாட களமிறங்கிய கோல் டைட்டன்ஸ் அணிக்கு அற்புதமான ஆரம்பம் இல்லாவிடினும் சராசரியான ஆரம்பம் ஒன்று கிடைத்திருந்தது. ஒரு கட்டத்தில் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்தது.

எனினும் லசித் குரூஸ்புள்ளே மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோரின் ஆட்டமிழப்புகளை தொடர்ந்து கோல் அணி தடுமாற தொடங்கியது. குறிப்பாக முதல் போட்டிகளில் பிரகாசித்திருந்த டிம் செய்பர்ட், பானுக ராஜபக்ஷ மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து கோல் அணி தடுமாறியது.

மீண்டும் கோல் அணிக்காக தலைவர் தசுன் ஷானக தனியாளாக போராட மறுமுனையில் ஜப்னா கிங்ஸ் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தார். தசுன் ஷானக அதிகபட்சமாக 24 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, கோல் டைட்டன்ஸ் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுகளையும், இன்றைய போட்டியில் ஜப்னா அணிக்காக அறிமுகமாகியிருந்த நன்ரே பேர்கர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி வேகமாக ஆட முற்பட்ட நிலையில், சரித் அசலங்க 5 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸுடன் இணைந்த தவ்ஹித் ஹிரிடோய் அற்புதமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 83 ஓட்டங்களை பகிர்ந்துக்கொண்டதுடன், 100 ஓட்டங்களை ஜப்னா கிங்ஸ் அணி தொட்டது. அதேநேரம் அரைச்சதம் கடந்திருந்த குர்பாஸ் 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற தவ்ஹித் ஹிரிடோய் வெறும் 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை குவிக்க, டேவிட் மில்லர் 7 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பந்துவீச்சை பொருத்தவரை கோல் அணியின் சார்பாக சகீப் அல் ஹஸன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றியினை பதிவுசெய்த ஜப்னா கிங்ஸ் அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், கோல் டைட்டன்ஸ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் இன்று இரவு 7.30க்கு ஜப்னா கிங்ஸ் மற்றும் பி- லவ் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டியொன்றும் இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles