முச்சக்கர வண்டிகளில் பாகங்களை பொருத்துவதற்கும் அலங்காரங்களை மேற்கொள்வதற்குமான கட்டணம் அறவிடும் முறையை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள திணைக்களம், முச்சக்கர வண்டி சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன் கீழ் முச்சக்கர வண்டிகளுக்கு பின்னால் மேலதிகமாக ஏணி போன்ற அலங்காரங்களை மேற்கொள்வதற்கு ஆயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது.
முன்பக்க ஒற்றை மின் விளக்கிற்கு பதிலாக 2 மின் விளக்குகளை பொருத்தினால் 2 ஆயிரத்து 500 ரூபா வசூலிக்கப்படவுள்ளது.
பிரதான மின் விளக்குகளுக்கு பதிலாக டுநுனு விளக்குகளை பொருத்துவதற்கு ஆயிரம் ரூபா கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
3 பாகங்களைக் கொண்ட முன் கண்ணாடியை தனிக் கண்ணாடியாக பொருத்துவதற்கு 2 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படவுள்ளது.
மேலும், இவ்வாறு அலங்காரங்களை நிறுவுதற்கான கட்டணம் அறவீடு 30 வகைகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலதிக தகவல்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.





