NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி உதயம் – தேசிய அமைப்பாளராக திலகரத்ன தில்ஷான் நியமனம்!

இலங்கையின் பிரபல நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற புதிய கட்சி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று முற்பகல் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சி அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன், கட்சியின் சின்னமாக ஒலிவாங்கி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இதன் கட்சி உறுப்பினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷான் ஆகியோரும் களமிறங்கவுள்ளனர்.

இதுதொடர்பில், உரையாற்றிய கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, புதிய பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறுவதற்கு 6 வாரங்களே இருக்கின்ற நிலையில் மக்களின் குரலாக புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இது மக்களின் எதிர்பார்ப்பிற்கான வெளிப்பாடு. மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை சமீபத்திய ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்;.

ஊழலை ஒழிக்க வேண்டும் என எங்கள் உறுப்பினர்களும் தலைவர்களும் பல ஆண்டுகளாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றோம். தற்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அரசியல்வாதிகள் பின்வாங்கும் நிலைகண்டு மக்கள் ஏமாற்றமடைந்து விட்டனர். நாங்கள் ஊழலையும் எதிர்ப்போம், ஊழலுக்கான வழிமுறைகளையும் கடுமையாக எதிர்ப்போம்.

அதேபோல், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் நம்முடைய பல்கலைக்கழகங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். கல்வியைப் போலவே மருத்துவர்களும் செவிலியர்களும் மதிக்கப்படக்கூடிய, மக்களுக்குப் பயன்தரக்கூடிய அளவில் சுகாதார கட்டமைப்புகளும் தேவைப்படுகின்றன. மேலும் சுகாதார காப்பீடு என்னும் புதிய பொறிமுறை ஒன்றை நாம் அறிமுகப்படுத்தவும் உள்ளோம்.

இவையனைத்திற்கும் முக்கிய முன்னுரிமை அளிக்கும் முதல் கட்சியாக நாங்கள் இருப்போம்.

அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை தான் எங்களுக்கு முன்னுரிமை. மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கு இது தான் சரியான நேரம்.

மதத்தால், சமூகத்தால், இனத்தால் ஏற்பட்டுள்ள பிளவை ஒருங்கிணைத்து ஒற்றுமையை மேம்படுத்துவோம். அத்தோடு எமது கட்சி இலங்கையின் அனைத்து மக்களையும் சமமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles