(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வாக்னர் படை தலைவர் பிரிகோசினால் உண்டாக்கப்பட்ட உள்நாட்டு கலகத்தின் போது, பொதுமக்கள் தங்களது தேவைக்கான பணத்தை கையிருப்பாக வைத்துக்கொள்ள விரும்பிய நிலையில், வங்கிகளில் உள்ள பணத்தை அவசர அவசரமாக எடுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஆயுத புரட்சி பெரிய அளவில் ஏற்பட்டால் உணவு மற்றும் அன்றாட செலவிற்கு பணம் தேவைப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக பணத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 23 – 25ஆம் திகதிகளில் சுமார் 1.1 பில்லியன் (இந்திய பண மதிப்பில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்) வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதாக ரஷ்யாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் 5 பில்லியன் அளவிற்கு மக்கள் பணத்தை எடுத்துள்ளனர். இதில் அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஒரு பில்லியன் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஐந்தில் ஒரு பகுதியாகும்.
ஜூன் மாதத்தில் அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டாலும், ரஷ்யாவின் பணவியல் கொள்கையை இது பாதிக்காது என அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருந்தாலும் வாக்னர் படையின் கலக முயற்சியால் ரஷ்யாவின் ருபெல் பணமதிப்பு 15 மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஏற்றுமதி வருவாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைந்து வருவதால், இது பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என பணவீக்கதையும் அதிகரிக்கும் என ரஷ்யாவின் மத்திய வங்கி ஆளுநர் கவலை வெளியிட்டுள்ளார்.