வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதன் போது, யாழ். நகரில் அமைந்துள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதியில் மிக நீண்ட காலமாக பயன்பாடில்லாது இருக்கும் தளத்தை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு நிரந்தர சந்தை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என வணிகர் கழகப் பிரதிநிதிகள் கோரினர்.
அதற்கு யாழ். மாநகர சபையுடன் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.
அதேவேளை, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை முன்னெடுக்க பலர் ஆர்வமாக உள்ளபோதும் அவர்களுக்கான தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான இடங்களையும், அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாக வணிகர் கழக பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
அதற்குப் பொருத்தமான இடங்களை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒதுக்கினால் அவற்றை குத்தகை அடிப்படையில் அவர்களுக்கு வழங்க முடியும் எனவும் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே கூரையில் அலுவலர்களை ஒழுங்குபடுத்தினால் இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
அதற்கு, வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பிரதேச செயலர் பிரிவுகளில் இடங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் அதற்கான தடைகள் இருக்காது என நம்புவதாகவும் அவற்றைச் செய்ய முடியும் எனவும் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.வடக்கு முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கைகள்