வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாவது,
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்திச் செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இலங்கைப் பணியாளர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இராஜதந்திர சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பணியை இராஜதந்திர சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவது தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு எனவும், அதற்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 04 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமித்தார்.
இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இவ்வாறு இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த நியமனங்கள் பின்வருமாறு,
கத்தார் நாட்டின் தூதுவராக – R.S.கான் அசாத்
ரஷ்யத் தூதுவராக – S.K. குணசேகர
குவைத் தூதுவராக – L.B.ரத்நாயக்க
எகிப்தியத் தூதுவராக – A.S.K.செனவிரத்ன
நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக – W.G.S.பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.