ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.
அவ்வகையில், இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து அபாரமான கோல் அடித்தார்.
இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.
இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.