பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து கடந்த மே 21ஆம் திகதி வௌியிட்டிருந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் கடந்த 10ஆம் திகதியிடப்பட்ட புதிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை நிர்ணயித்து தொழில் ஆணையாளரால் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வகையில், தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டிருந்தார்.
இந்த வர்த்தமானியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும் விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதற்கமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த மொத்தக் கொடுப்பனவாக 1,700 ரூபா கிடைக்கும் என அறிவிப்பட்டிருந்தது.
எனினும், மே மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறித்தலை இரத்துசெய்வதாக குறிப்பிட்டு மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவிப்பை தொழில் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
தேயிலை மற்றும் இறப்பர் ஆகிய தொழில்துறைகளின் தொழிலாளர்களது குறைந்தபட்ட நாளாந்த கொடுப்பனவு தொடர்பில் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக அவர் தனித்தனியாக இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்களை வௌியிட்டுள்ளார்.