NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2025ஆம் ஆண்டு இடம்பெற்ற 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் உயிரிழப்பு..!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

குறித்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

ஜனவரி 04 – வெலிகம பொலிஸ் பிரிவின் கப்பரத்தொட்ட, வல்லிவெல பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 05 பேரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜனவரி 07 – கல்கிஸ்ஸை, வட்டரப்பல குதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 36 மற்றும் 20 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 09 – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சுடப்பட்ட நபர் லோக்கு பெட்டி என்ற குற்ற கும்பல் உறுப்பினரின் உறவினர் என்று பொலிஸார் பின்னர் தெரிவித்தனர்.

ஜனவரி 13 – தெவினுவர தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஜனவரி 15 – அன்று அதிகாலையில் தொடங்கொடவின் வில்பத பகுதியில் ஒரு வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனவரி 16 – மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த இரண்டு பேரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதே நாளில், கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கார் பாகங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜனவரி 19 – கல்கிஸ்ஸை சிறிபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

24 வயதுடைய ஒருவரும் 36 வயதுடைய ஒருவரும் சம்பவத்தில் பலியாகினர்.

கொலை நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குள், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், இந்தக் கொலைக்காக 1.5 மில்லியன் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், முற்பணமாக 200,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் பொலிஸாரிடம் கூறியிருந்தார்.

ஜனவரி 22 – அம்பலந்தோட்டை கொக்கல பகுதியில் காரில் வந்த தரப்பினர், நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.

ஆனால் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜனவரி 31 – காலி, ஹினிதும, பனங்கல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதுடன், துப்பாக்கிச் சூட்டில் அதன் உரிமையாளர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள்

பெப்ரவரி 07 – மினுவங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் 35 வயதான நபர் உயிரிழந்தார்.

பெப்ரவரி 10 – கொட்டாஞ்சேனை , பெனடிக் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 43 வயதான நபரே பலியானார்.

இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘பழனி ஷிரான் குளோரியன்’ குழுவால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் பின்னர் கண்டறிந்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் வர்த்தகரான “புகுடுகண்ணா” என்ற பாலச்சந்திரன் புஷ்பராஜின் நெருங்கிய கூட்டாளி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி 19 – மித்தேனிய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை தந்தை, மகள் மற்றும் மகன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

‘கஜ்ஜா’ என்ற நபரும், அவரது 6 வயது மகள் மற்றும் 9 வயது மகனுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், அதே நாளில், கணேமுல்ல சஞ்சீவ என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூடு சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரால் நடத்தப்பட்டதுடன், பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கணேமுல்லா சஜீவவின் எதிராளியான கெஹல்பத்தர பத்மே என்பவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் பின்னர் கண்டறிந்தனர்.

பெப்ரவரி 21 – ஜா எல பமுனுகம, மோர்கன்வத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில், அதே நாளில், கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்திக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், அதே நாளில் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து அந்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவரும் கொல்லப்பட்டனர்.

பெப்ரவரி 26 – மினுவங்கொடை பத்தடுவன சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இரண்டு பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், காயமடைந்த நபர் கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மார்ச் மாதத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள்

மார்ச் 08 – கம்பஹாவின் அகரவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் இருந்த இரண்டு பேர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூடு, கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவாவின் உதவியாளரான தம்மிட்ட சுமித் என்பரால் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மார்ச் 13 – வெலிவேரியவில் உள்ள அரலியகஸ்தேக சந்திப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவரை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த நபர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பது பின்னர் தெரியவந்தது.

மார்ச் 14 – அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் இடம்தோட்டை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே பகுதியை சேர்ந்த ‘பொடி சுத்தா’ என்ற 39 வயதுடைய நபரே சம்பவத்தில் பலியானார்.

மார்ச் 17 – மிதிகம பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, என்பதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் அல்லது சந்தேக நபர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அன்றைய தினம் மாலையே, கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் 22 மற்றும் 28 வயதான இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

மார்ச் 22 – மாத்தறை – தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தின் தெற்கு வாயிலுக்கு முன்னால் உள்ள சிங்காசன வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது வேனில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles