இலங்கை முழுவதும் சுமார் 5 மணித்தியாலங்கள் ஏற்பட்ட மின் தடையால் 600 கோடி ரூபா பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் மின்வெட்டைத் தடுப்பதற்காக வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபைக்கு இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பரிந்துரைகளை புறக்கணித்ததற்கு தற்போதைய மின்சார அமைச்சர் மற்றும் மின்சார அமைச்சின் செயலாளரே பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி இதேபோன்று ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சுமார் 1500 கோடி ரூபா பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.