கடந்த வருடம் 783,420 மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ அரிசியை அண்ணளவாக 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்திருந்தால், அரிசி இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 117,513,000,000 ரூபாவாகும். அதன்படி அரிசி இறக்குமதிக்காக சுமார் 335 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த அரிசி உற்பத்தி கணிசமான அளவு குறைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட விநியோகத் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான இடையூறுகள் காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளமை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், 2021/22 பெரும்போகத்தில் நெல் விளைச்சல் 36.9 சதவீதத்தால் குறைந்துள்ளது. 2022 சிறுபோகத்தில், நெல் விளைச்சலும் 30 சதவீதத்தால் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மொத்த அரிசி உற்பத்தியானது 2.1 மெற்றிக் டொன் அரிசிக்கு சமமானதாக இருந்தது. இது 11 மாத உள்நாட்டு அரிசி தேவைக்கு மாத்திரம் போதுமானது என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.