NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

CSK vs KKR இன்று மோதல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 22ஆம் திகதி நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. 26ஆம் திகதி நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் CSK வெற்றி பெற்றது. குஜராத்தை 63 ஓட்டங்களில் தோற்கடித்தது.

சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

CSK முதல் 2 ஆட்டத்தில் சொந்த மண்ணில் வென்ற பிறகு அடுத்த 2 போட்டிகளில் வெளியூரில் தோற்றது. விசாகப்பட்டினத்தில் கடந்த 31ஆம் திகதி நடந்த போட்டியில் டில்லியிடம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கல்கத்தாவை வீழ்த்தி 3ஆவது வெற்றியை பெறும் ஆர்வத்திலுள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் கல்கத்தா தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியை வீழ்த்துவது சவாலானது. கடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பெடுப்பும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது. கல்கத்தா போன்ற பலமான அணியுடன் விளையாடும் போது அதில் இருந்து மீள்வது அவசியமாகும்.

துடுப்பெடுப்பில் ஷிவம் துபே தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியில் விளையாடாத முஸ்டாபிசுர் ரகுமான் நாளைய ஆட்டத்தில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2 முறை IPL கிண்ணத்தை வென்ற கல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்சல், பில்சால்ட், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர், புதுமுக வீரர் ரகுவன்சி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் துடுப்பெடுப்பிலும், ஹர்திக் ரானா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையிலுள்ளனர். இரு அணிகளும் 28 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18இல், கல்கத்தா நைட் ரைடர்ஸ் 10இல் வெற்றி பெற்றுள்ளன.

Share:

Related Articles