(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
16ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மகுடம் சூடிக்கொண்டது.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி ஆரம்பமான ஐ.பி.எல் தொடர் 10 அணிகள் பங்கேற்பில், 20 ஓவர் கொண்ட போட்டியாக இடம்பெற்று வந்தது.
அஹ்மதாபாத்தில் நேற்று (29) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்சும், சென்னை சுப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் தோனி, மழைக்குரிய அறிகுறி தென்படுவதால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தொடங்கி வைத்தனர்.
தொடர்ச்சியான ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 215 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட களமிறங்கியது.
மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூவிஸ் முறைப்படி சென்னை அணி வெற்றிபெற 15 ஓவர்களில் 171 ஓட்டங்களைப் பெற வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இடைவிடாத மழையை தொடர்ந்து, சென்னை அணிக்கு 171 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நடுவர்களினால் நியமிக்கப்பட்டது.
பின்னர் 171 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சென்னை அணி 15 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
வெற்றியை தொடர்ந்து, அணித்தலைவர் எம்.எஸ் தோனி தனது ஓய்வு குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் பதிலளிக்கையில், ‘நன்றி சொல்லிவிட்டு வெளியேறுவது எளிதான காரியம். ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐ.பி.எல் விளையாட முயற்சிப்பது. இது என் உடலுக்கு எளிதாக இருக்காது. ஆனால் இந்த சீசனில் அதிக அன்பைக் காட்டிய இரசிகர்களுக்கு இது என் தரப்பில் இருந்து ஒரு பரிசாக இருக்கும் எனக்கூறினார்.