NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

FIFA முதல் தடவையாக அறிமுகப்படுத்தியுள்ள ‘FIFA சீரிஸ்’ கொழும்பில்..

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் FIFA முதல் தடவையாக அறிமுகப்படுத்தியுள்ள பீபா சீரிஸ் (FIFA Series) சிநேகபூர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் ஆரம்பமாகியுள்ளது.

பூட்டான், பப்புவா நியூ கினி, மத்திய ஆபிரிக்க குடியரசு, இலங்கை ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றும் இந்த சிநேகபூர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்துகிறது.

இந்த சுற்றுப் போட்டிக்கான இலங்கை குழாத்தை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இம்முறை இலங்கை 90 வீதம் புலம்பெயர் இலங்கை வம்சாவளி வீர்களைக் கொண்ட அணியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்காக விளையாடி தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வரும், வசீம் ராஸிக், டிலொன் டி சில்வா, ஆதவன் ராஜ்மோகன் ஆகியோர் FIFA சீரிஸ் கால்பந்தாட்டப் போட்டியிலும் விளையாடவுள்ளனர்.

அவர்களை விட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கை பெற்றோருக்கு பிறந்து அந்தந்த நாடுகளில் கால்பந்தாட்ட கழகங்களுக்காக விளையாடிவரும் வீரர்களை இலங்கை அணியில் இணைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜெக், குளோடியோ, ஜேசன், டக்சன், ஸ்டீவன், பாரத், அனுஜன், லியொன், கெனிஸ்டன், ஒலிவர், ராகுல், மரியோ ஆகியோர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இலங்கை அணியில் முதல் பதினொருவரில் பெரும்பாலும் புலம்பெயர் இலங்கை வம்சாவளியினரே இடம்பெறுவர் என தெரிவிக்கப்படுகிறது.

பீபா சீரிஸ் போட்டியில் நான்கு நாடுகள் பங்குபற்றுகின்றபோதிலும் ஒவ்வொரு நாடும் இரண்டு போட்டிகளில் மாத்திரமே விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனது முதலாவது போட்டியில் பப்புவா நியூ கினியை எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் இரண்டாவது போட்டியில் பூட்டானையும் எதிர்த்தாடவுள்ளது.

இந்நிலையில், சர்வதேச கால்பந்தாட்ட நாடுகளுக்கான தரவரிசையில் தற்போது 822.03 புள்ளிகளுடன் 204ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை தான் விளையாடும் பப்புவா நியூ கினி, பூட்டான் ஆகிய நாடுகளுடனான இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 12.36 தரிவரிசை புள்ளிகளைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான உத்தியோகப்பூர்வ ஒலி மற்றும் ஒளிபரப்பாளர்களாக தமிழ் FM, SBC TV, Sitha FM மற்றும் Red FM அலைவரிசைகள் விளங்குகின்றன.

Share:

Related Articles