சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புக்கான வேலைத்திட்டங்கள் அநேகமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய வேலைத்திட்டங்களை அவ்வாறே முன்னெடுத்துச் சென்றால் விரைவில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவுசெய்ய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுத்து செல்வதா அல்லது நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதா என்பதை நிதி அமைச்சே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கடன் நிலைபேறுதன்மையை மறு ஆய்வு செய்வதா? இல்லையா? என்பதை நிதியமைச்சே தீர்மானிக்க வேண்டும்.
தற்போது வரையான வேலைத்திட்டங்கள் அநேகமாக நிறைவடைந்துள்ளன. அத்துடன் மிக விரைவாக நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து விரைவாக மூன்றாம் கட்ட கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வோம் என்ற தகவலை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளது.
உடன்படிக்கை பரிந்துரைகளில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள கடன் நிலைபேறுதன்மை மறு ஆய்வின் அடிப்படையிலேயே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், அதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று நம்புகிறோம்.
தற்போது நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதென்று அரசாங்கம் தீர்மானித்தால், மேற்குறிப்பிட்ட திட்டங்களின் அடிப்படையில் தொடர்ந்தும் பயணிக்க முடியும்.
அவர்களால் வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் எமது தரப்பிலிருந்து வழங்கப்பட்ட நிவாரணம் என்பவற்றுக்கு இடையில் பொறுத்தம் இருக்கிறது என்ற தீர்மானத்தை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் 6 மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் பிணை பறிமாற்றம் செய்யவும் முடியும் என சுட்டிக்காட்டினார்.