NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிறுத்தப்பட்ட சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு…!

2024 ஆம் ஆண்டிற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நிலையான மற்றும் தரமான கல்வியை உருவாக்குவதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பல சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்காக சர்வதேச தரத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை அறிமுகம் செய்வதுடன் மனித வளத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அதேநேரம், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்ட சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், புதிய கல்வி சீர்திருத்தத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் இணைந்து ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக இதுவரை 13 அயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கல்வி அமைச்சர் ஆங்கில மொழிக்கான பாடப்புத்தகங்களை புதுப்பிக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, பெருந்தோட்ட மக்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், தோட்டப் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களாக பயிற்றுவிக்கும் பயிற்சிப் பல்கலைக்கழகமொன்றை கொட்டகலை பிரதேசத்தில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான அனைத்து விடயங்களுடனும் அடுத்த வருடத்தில் இருந்து கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles